செய்திகள்
நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு பஸ்சில் பயணம் செய்த பக்தர்களை காணலாம்

நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்

Published On 2020-12-21 04:40 GMT   |   Update On 2020-12-21 04:40 GMT
நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
நெல்லை:

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோவில்களுக்கு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு சிறப்பு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வந்தது.

இந்த பஸ் தொடக்க நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சரவணன், சசிகுமார் ஆகியோர் பக்தர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வழிஅனுப்பி வைத்தனர்.

இதேபோல் வருகிற 27-ந் தேதி, அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி, 10-ந் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லை ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News