செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள், அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் - 156 பேர் கைது

Published On 2020-12-15 15:54 GMT   |   Update On 2020-12-15 15:54 GMT
வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் 156 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

இந்திய விவசாயிகளை பாதிக்கின்ற வேளாண் திருத்தச்சட்டம் மூன்றையும் உடனே திரும்ப பெற வேண்டும். விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின்சார சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் சார்பில் நேற்று நாடு முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. நெல்லையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரும்படையார் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜகுரு, இந்திய விவசாய சங்க மகாசபை நிர்வாகி கருப்பசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், பகுதி செயலாளர் மணப்படை மணி, சங்கர்நகர் செயலாளர் முருகன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், அந்த கட்சியினர் வண்ணார்பேட்டையில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காணும் வரை இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர்கள் ஜான் பிரிட்டோ, தீபு, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், பிரவீனா, பத்மநாபன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேரையும் கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News