செய்திகள்
தண்டுவடம் காயமடைந்தவர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தபோது எடுத்த படம்.

தண்டுவடம் காயமடைந்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு மனு

Published On 2020-12-15 12:47 GMT   |   Update On 2020-12-15 12:47 GMT
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்டுவடம் காயமடைந்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்கள் போடுவதற்காக தனிப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராசு, வட்டார பொறுப்பாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையில், தண்டுவடம் காயமடைந்தோர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, ஒரு மனு கொடுத்தனர். அதில், தண்டுவடம் காயமடைந்தோருக்கு மாத உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். சாய்வு தளம் அமைத்து சக்கர நாற்காலியுடன் சென்று வரக்கூடிய கழிவறை அமைத்து தர வேண்டும். சுயதொழில் தொடங்க வட்டி இல்லாத மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மார்ஷல் ராயன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி கொண்டு வருகிறோம். அதேபோல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

வேப்பந்தட்டை தாலுகா அ.மேட்டூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், அரும்பாவூர் பெரியசாமி கோவில் அணைக்கட்டு சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டதால், அரும்பாவூர் பெரிய ஏரிக்கு அப்படியே தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த ஏரி உடையும் அபாயம் உள்ளது. எனவே அந்த அணைக்கட்டை கதவுகளுடன் கூடிய மதகுகள் அமைத்து சீரமைக்கவும், அணைக்கட்டை உடைத்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராம காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசு கட்டிக்கொடுத்த காலனி வீடுகளில் வசித்து வருகிறோம். புயல், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் எங்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். தற்போது நாங்கள் அதே வீடுகளில் வசித்து வருகிறோம். எனவே எங்களது பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா பேரளி கிராமத்தில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சாதி பிரச்சினை ஏற்பட்டதில்லை. தற்போது ஒரு நபர் எங்களுக்குள் பிரிவினையை தூண்டி விட்டு சாதி பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தில் இதேபோல் அவர் பிரச்சினை ஏற்படுத்தியுள்ளார். எனவே அவர் கொடுக்கும் புகார் மனுவினை போலீசார், அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சினைகளுக்கு உடந்தையாக இருந்த போலீசாரையும், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்குகளில் கைதானவர்களை விடுவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 மனுக்களும், வேப்பந்தட்டையில் 8 மனுக்களும், குன்னத்தில் 9 மனுக்களும், ஆலத்தூரில் 5 மனுக்களும், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் இருந்து 154 மனுக்களும் என மொத்தம் 187 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அந்த மனுக்களின் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்த மனுக்களுக்கு அரசின் நலதிட்ட உதவிகளை உடனடியாக வழங்கிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News