செய்திகள்
சரத்குமார்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்- சரத்குமார்

Published On 2020-12-08 07:29 GMT   |   Update On 2020-12-08 07:29 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கனமழை மற்றும் அடுத்தடுத்த புயல் காரணமாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் தாழ்வான இடங்களிலும், விவசாய நிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

வெள்ளத்தால் கடலூரில் வீடு, உடமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்ச மக்களின் தேவைகளுக்கும், 80,000 ஏக்கர் விளைநிலங்களுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி அவர்களின் வேதனையை போக்கிட வேண்டும்.

குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் நன்செய், புன்செய், தோட்டப் பயிர், மரப்பயிர், கால்நடைகளை சார்ந்து வாழக்கூடிய விவசாயிகளும்,பொதுமக்களும் சூழ்நிலையை சமாளித்து மீண்டெழுவதற்கு உடனடியாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ஆற்று பாலம், ஆற்றுகரை உடைப்பு, வீடுகள் இடிந்ததால் ஏற்பட்ட பெரும் சேதங்களை சீர்செய்வதற்கும், கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கும், நீர்நிலைகள், விளைநிலங்களை சீரமைப்பதற்கும், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் இயல்பு நிலை திரும்புவதற்கும் மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து பேரிடர் நிவாரண தொகையை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News