செய்திகள்
வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

அடிப்படை வசதிகள் கேட்டு வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-12-05 13:23 GMT   |   Update On 2020-12-05 13:23 GMT
தேனி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:

தேனி அல்லிநகரம் நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் 6 தெருக்கள் உள்ளன. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தெருக்களில் சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி, தெரு விளக்கு வசதி இல்லை. 

பாதாள சாக்கடை திட்டம் இப்பகுதியில் செயல்படுத்தப்படாமலும், புதிய குடிநீர் திட்டத்தில் குழாய் இணைப்புகள் வழங்கப்படாமலும் உள்ளது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை செலுத்திய போதிலும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் தீர்வு காணப்படவில்லை. 

இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடு மற்றும் தெருக்களில் கருப்புக்கொடிகளை ஏற்றினர். தகவல் அறிந்த அல்லிநகரம் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

நகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படும் வரை கருப்புக்கொடிகளை அகற்றமாட்டோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News