செய்திகள்
நிவாரண முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவ மக்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடை மழை- 5 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு

Published On 2020-12-04 08:51 GMT   |   Update On 2020-12-04 08:51 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலால் அடை மழை பெய்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம்:

தென்கிழக்கு வங்க கடலில் உருவான புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பிற்பகலில் தொடங்கிய மழை இடைவிடாது நேற்று முழுவதும் பெய்தது. சில நேரம் சாரல் மழையாகவும் சில நேரம் பலத்த மழையாகவும் கொட்டியது.

கடலோர பகுதிகளில் ராமேசுவரம் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மழையின் தாக்கம் அதிகம் இருந்தது. தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்தது. ராமநாதபுரம் நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கி நின்றது. வயல்வெளிகளையும் மழைநீர் சூழ்ந்தது. பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்ததால் மாவட்ட நிர்வாகம் கடலோர பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை பணிகளை மேற்கொண்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் புரெவி புயல் காரணமாக பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்தும் விழுந்தன. எமனேசுவரம் நயினார்கோவில் சாலை, விளத்தூர்சாலை, சாயல்குடி-மூக்கையூர் சாலை, முத்தனேரி சாலை, ராமநாதபுரம் இந்திராநகர், திருவாடானை ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விழுந்த இந்த மரங்களை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் முருகன் மேற்பார்வையில் பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி அப்புறப்படுத்தினர்.

மழை காரணமாக கோப்பேரிமடம்-ஆற்றாங்கரை சாலை, பொதுவக்குடி சாலை, காவனூர் சாலை, நகரம் சாலை, பனிதிவயல் சாலை ஆகியவை சேதமடைந்தன. களிமண் பகுதியாக இருந்ததால் தொடர்மழை காரணமாக இந்த சாலைகள் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தன. இந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் சரிசெய்து போக்குவரத்து பாதிக்கப்படாமல் வழிவகை செய்தனர். 1172 குழந்தைகள் உள்பட மொத்தம் 5177 பேர் மாவட்டம் முழுவதும் 75 இடங்களில் உள்ள பல் நோக்கு மைய கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை மாவட்ட நிர்வாகம் அளித்து வருகிறது.
Tags:    

Similar News