செய்திகள்
தஞ்சையில் தற்காலிக மார்க்கெட் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடப்பதை காணலாம்

தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் மழை காரணமாக காய்கறி விற்பனை பாதிப்பு

Published On 2020-12-03 10:07 GMT   |   Update On 2020-12-03 10:07 GMT
தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் நேற்று மழை காரணமாக காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து காய்கறிகள் வரத்து அதிகமாக இருந்தாலும் வாங்க ஆள் இல்லை.
தஞ்சாவூர்:

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இந்த மழை காரணமாக தஞ்சை குழந்தையேசு கோவில் அருகே உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் பாதிக்கப்பட்டது.

இந்த மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வரும். இதே போல் தமிழகத்தில் திண்டுக்கல், பழனி, ஊட்டி, ஓசூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, நடுக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு காய்கறிகள் கொண்டு வரப்படும்.

நேற்று காலை முதலே மழை பெய்து கொண்டே இருந்தாலும் வழக்கம் போல காய்கறிகள் விற்பனைக்கு வந்து கொண்டே இருந்தது. வெங்காயம் மற்றும் காய்கறிகள் லாரிகளில் வழக்கம் போல வந்து இறங்கின. வியாபாரிகளும் தங்களது கடைகளை திறந்து வைத்து இருந்தனர். ஆனால் மழை காரணமாக மக்கள் வரத்து இல்லை.

இதனால் காய்கறி வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. ஒரு சில வியாபாரிகள் மற்றும் பெரிய ஓட்டல்களில் இருந்து வந்து மட்டும் காய்கறிகளை வாங்கிச்சென்றனர். வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தால் காய்கறி வாங்குவதற்கு மக்கள் யாரும் வரவில்லை. ஒன்றிரண்டு பேர் வந்து வாங்கிச்சென்றனர். இதனால் நேற்று சில்லறை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக காய்கறிகள் விலை வழக்கம் போல காணப்பட்டது.”என்றனர்.

தஞ்சை மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

கேரட் (1 கிலோ) ரூ.60, பீன்ஸ் ரூ.40, பாகற்காய் ரூ.45, சவ்சவ் ரூ.20, காலி பிளவர் ரூ.60, வெண்டைக்காய் ரூ.20, கத்தரிக்காய் ரூ.40 முதல் ரூ.80 வரை, முட்டைக்கோஸ் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.50, இஞ்சி ரூ.30 முதல் ரூ.50 வரை. முருங்கைக்காய் ரூ.60, தக்காளி ரூ.25, பீட்ரூட் ரூ.45, பல்லாரி ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.100.
Tags:    

Similar News