செய்திகள்
கோப்பு படம்.

பந்தல் டெக்கரேசன் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் கைது

Published On 2020-12-02 14:08 GMT   |   Update On 2020-12-02 14:08 GMT
தஞ்சையில், பந்தல் டெக்கரேசன் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சிராஜூதீன் நகரில் வசித்து வந்தவர் மணிகண்டன்(வயது 41). இவர், சாமி பந்தல் டெக்கரேசன் சென்டர்’ என்ற பெயரில் தனது நிறுவனத்தை தஞ்சை யாகப்பா நகர் பகுதியில் நடத்தி வந்தார். மேலும் வாடகை பொருள் உரிமையாளர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளராகவும் இருந்தார். இவருடைய மனைவி நித்யா(33). இவர்களுக்கு ராகவி(7), ராகவ்(1) என 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டனுக்கும், தஞ்சை கூட்டுறவு காலனியை சேர்ந்த கவிதா(42) என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. 

இதையடுத்து அவருடைய வீட்டிற்கு மணிகண்டன் அடிக்கடி சென்று வந்துள்ளார். கவிதா அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் சம்பவத்தன்று இரவு தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள கவிதா வீட்டின் மொட்டை மாடியில் கேபிள் வயரால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நித்யா கொடுத்த புகாரில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தினர். மணிகண்டனின் இறப்பு தொடர்பாக கவிதாவை கைது செய்ய வேண்டும், அப்போதுதான் உடலை வாங்குவோம் என மணிகண்டனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் மணிகண்டன் தற்கொலை செய்து இறந்தது தெரிய வந்தது. கவிதாவின் வீட்டு மொட்டை மாடியில் இறந்ததால் அவரை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் இல்லாததால் வருமானம் இன்றி மணிகண்டன் மிகவும் சிரமப்பட்டுள்ளார். அவருக்கு கடன் தொல்லையும் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் கவிதாவிடமும் பணம் வாங்கி உள்ளார். மேலும் அவருடைய நகையை வாங்கி அடகு வைத்துள்ளார்.

கவிதா பணம், நகையை திருப்பிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணிகண்டனை தனது வீட்டிற்கு வரவேண்டாம் என்று கவிதா கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் மொட்டை மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கவிதாவை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News