செய்திகள்
நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கார்த்திகா வெளியிட்ட போது எடுத்த படம்.

நபார்டு வங்கி சார்பில் அடுத்த நிதியாண்டில் ரூ.5 ஆயிரத்து 735 கோடி கடன் வழங்க இலக்கு

Published On 2020-11-30 18:06 GMT   |   Update On 2020-11-30 18:06 GMT
நபார்டு வங்கி சார்பில் அடுத்த நிதியாண்டில் ரூ.5 ஆயிரத்து 735 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் கார்த்திகா தெரிவித்தார்.
தர்மபுரி:

நபார்டு வங்கியின் 2021-22-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கி நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் வசந்தா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், புள்ளியல் துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், நபார்டு வங்கி மாவட்ட உதவி பொது மேலாளர் பிரவீன்பாபு, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் கண்ணன் மற்றும் அரசு துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி தர்மபுரி மாவட்டத்தில் கிடைக்க பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.5 ஆயிரத்து 735 கோடியே 26 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் நீண்ட கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த திட்ட அறிக்கை விளக்குகிறது. இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும்.

இந்த கடன் திட்ட அறிக்கை பல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையிலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் மத்திய, மாநில அரசுகளின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்ட அறிக்கையில் விவசாய கடனாக ரூ.4.50 கோடியும், குறுகிய, சிறிய நடுத்தர தொழில்கள் ஏற்றுமதி கடனாக ரூ.79 கோடியும், கல்வி கடனாக ரூ.10 கோடியும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்டு வசதி கடனாக ரூ.14.50 கோடியும், மரபுசாரா எரிசக்தி கடனாக ரூ.2 கோடியும், மற்ற கடன்களாக ரூ.17 கோடியும், சமுதாய கட்டமைப்பு கடன் வசதி ரூ.5.88 கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் இந்த இலக்குகளை உரிய காலத்தில் எய்திட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Tags:    

Similar News