செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-11-30 08:12 GMT   |   Update On 2020-11-30 08:12 GMT
மதுரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதூர்:

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இங்கு குடிநீர் வசதிக்காக குழாய் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக வீடுதோறும் குழாய் இணைப்பு வழங்க மனுக்களும் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிய இணைப்பு வழங்கும் பணி நடைபெறுவதால் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே, குடிநீர் வழங்க வலியுறுத்தி விநாயகர் நகர், வாசன் நகர், வ.உ.சி. நகர், இ.எம்.டி. நகர் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், புதிய விரிவாக்க பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டும், குடிநீர் பொதுமக்களுக்கு போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து தகவலறிந்த மேற்கு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் தர்மராஜன், சுந்தர்சாமி, ஊராட்சி செயலாளர் மனோஜ்குமார் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News