செய்திகள்
கொலை

கோவை அருகே தொழிலாளி கொலை- கைதான விசைத்தறி உரிமையாளர் வாக்குமூலம்

Published On 2020-11-16 07:14 GMT   |   Update On 2020-11-16 07:14 GMT
கோவை அருகே கள்ளக்காதலை அம்பலப்படுத்துவேன் என மிரட்டியதால் தொழிலாளி தீர்த்து கட்டினேன் என்று கைதான விசைத்தறி உரிமையாளர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கருமத்தம்பட்டி:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 47). இவரது மனைவி ஜெயராணி (43). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று வீட்டில் இருந்த முத்துக்குட்டி தனது மனைவியிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜெயராணி தனது கணவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது கணபதி பாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் முத்துக்குட்டி மர்மான முறையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயராணி இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் விரைந்து வந்து முத்துக்குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் முத்துக்குட்டியை விசைத்தறி கூடத்தின் உரிமையாளர் அரசூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (26) என்பவர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சந்திரசேகரன், கூலிப்படையை சேர்ந்த சந்தோஷ்குமார் (27), மணி (48), செந்தில்குமார் (39) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசைத்தறி உரிமையாளர் சந்திரசேகரனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

முத்துக்குட்டி என்னுடைய விசைத்தறி கூடத்தில் கடந்த 2 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். என்னால் சரியாக சம்பளம் கொடுக்க முடியாததால் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றார். பின்னர் வேறு ஒரு விசைத்தறி கூடத்துக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். என்னுடைய விசைத்தறி கூடத்தில் முத்துக்குட்டி வேலை பார்த்த போது அவருக்கு நான் ரூ.8 ஆயிரம் சம்பள பாக்கி கொடுக்க வேண்டியது இருந்தது. அவர் அடிக்கடி என்னை சந்தித்து சம்பளத்தை கொடுங்கள் என்று கேட்டு வந்தார். நான் தொடர்ந்து பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்த முத்துக்குட்டி சம்பளத்தை தரவில்லை என்றால் என்னுடைய கள்ளக்காதலை வெளியே சொல்லி அவமானப்படுத்தி விடுவதாக என்னை மிரட்டினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே முத்துக்குட்டியை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக சந்தோஷ்குமார், மணி, செந்தில்குமார், ராஜகோபால் ஆகியோரை ஏற்பாடு செய்தேன்.

சம்பவத்தன்று அவர்கள் வீட்டில் இருந்த முத்துக்குட்டியை மது குடிக்க செல்லலாம் வா என்று அழைத்துக்கொண்டு கணபதி பாளையத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவருக்கு மதுவை அளவுக்கு அதிகமாக கொடுத்து குடிக்க வைத்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த முத்துக்குட்டியை கல்லால் தாக்கி கொலை செய்தனர். இதில் அவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். பின்னர் எனக்கு முத்துக்குட்டியை கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். நான் தலைமறைவாக இருக்குமாறு அவர்களிடம் கூறினேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ராஜகோபாலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News