செய்திகள்
கோப்புபடம்

காரமடையில் மருமகளுடன் விஷம் குடித்த மாமியார் பலி

Published On 2020-11-13 06:41 GMT   |   Update On 2020-11-13 06:41 GMT
காரமடையில் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் மருமகளுடன் விஷம் குடித்த மாமியார் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரமடை:

கோவை மாவட்டம் காரமடை அருகே மொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவருடைய மனைவி நாகமணி (வயது 45). இவர்களுடன் ஆறுமுகத்தின் தாய் முத்தம்மாள் (65) என்பவரும் வசித்து வந்தார். இவர்கள் குடும்பமாக விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் விவசாயத்தை முறையாக கவனிக்க முடியாமலும், விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் ஆறுமுகம் மனமுடைந்து காணப்பட்டார்.

மேலும் உறவினர் நண்பர்களிடம் கடன் வாங்கி பயிர் செய்து போதிய வருமானம் இல்லாததால் இது குறித்து மனைவி மற்றும் தாயாரிடம் பலமுறை கூறி வேதனையடைந்தார். இதனால் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு, செல்வது குறித்து மனைவி மற்றும் தாயாரிடம் கேட்டு வந்தார்.

இந்த நிலையில் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததாலும், வாழ்க்கையில் விரக்தியடைந்ததாலும் ஆறுமுகத்தின் தாய் முத்தம்மாள், நாகமணி ஆகியோர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.அப்போது முத்தம்மாள், நாகமணி ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆறுமுகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் அவர்கள் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி முத்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். நாகமணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரமடையில் போதிய வருமானம் இல்லாததால், மருமகளுடன் விஷம் குடித்த மாமியார் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News