செய்திகள்
கோப்புபடம்

கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தபால் ஓட்டுகள்

Published On 2020-11-13 06:34 GMT   |   Update On 2020-11-13 06:34 GMT
கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:

கோவை மாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதில் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் அளிக்கப்படும். இந்த நிலையில் தேர்தல் கமிஷன் ஒவ்வொரு மாவட்டத்திலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர் என்று கணக்கிட உத்தரவிட்டது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 44 ஆயிரத்து 969 வாக்காளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் ஆண்கள் 22 ஆயிரத்து 671 பேர். பெண்கள் 22 ஆயிரத்து 298 பேர்.

இதேபோல நீலகிரி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 5 ஆயிரத்து 348 பேர் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 2 ஆயிரத்து 228 பேர். பெண்கள் 3 ஆயிரத்து 120 பேர் அடங்குவர்.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்குமேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுபோட முடியாது என்பதால் அவர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டன. அந்த நடைமுறையை இந்தியா முழுவதும் அமல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின்போது 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களால் வாக்குச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிக்க முடியாது என்பதால் தபால் ஒட்டுகள் வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

அதனால் தான் கோவை மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஓட்டுப்பதிவு தினத்துக்கு முன்கூட்டியே ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்படும். அவர்கள் அதை தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். ஓட்டுச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. தபால் ஓட்டுகள் வயதானவர்களுக்கு எப்படி வழங்கப்படும் என்ற தெளிவான உத்தரவுகள் விரைவில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News