செய்திகள்
தீபாவளி சிறப்பு பஸ்கள்

தீபாவளி சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கின

Published On 2020-11-11 05:53 GMT   |   Update On 2020-11-11 05:53 GMT
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயங்க தொடங்கின.
சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை கொண்டாட மக்கள் வழக்கமாக உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள். தீபாவளி விற்பனை களைகட்டி வருகிறது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13-ந் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரம் பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 3 ஆயிரத்து 510 பஸ்கள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 510 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து இந்த மூன்று நாட்களுக்கு 5 ஆயிரத்து 247 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 14 ஆயிரத்து 757 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 15 முதல் 18-ந் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரம் பஸ்களுடன், 3 ஆயிரத்து 416 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4 ஆயிரத்து 610 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 26 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

சென்னையில் 5 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், கே.கே. நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.

தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுபோல தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் புறப்படும்.

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

எம்.ஜி.ஆர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம் மற்றும் கோயம்புத்தூருக்கு இயக்கப்படுகிறது. முதல்-அமைச்சர், அறிவித்த தளர்வுகளின்படி புதுச்சேரிக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

முன்பதிவு செய்துள்ள பஸ்கள் எம்.ஜி.ஆர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும்.

டிக்கெட் முன்பதிவு மையங்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10, தாம்பரம் சானிடோரியம் 2, பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒன்று உள்பட 13 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர www.tnstc.in., tnstc.official app, www.paytm.com, www.busindia.com என்ற இணையதள முகவரியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

பயணிகள் நலன் கருதி 24 மணி நேரம் செயல்படும் வகையில் 94450-14450, 94450-14436 ஆகிய தொலைபேசி எண்களை கொண்ட கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
Tags:    

Similar News