செய்திகள்
கத்திக்குத்து

திருப்பூரில் ஜவுளிக்கடைக்குள் முக கவசம் அணிந்து வர கூறியதால் தகராறு- 3 பேருக்கு கத்திக்குத்து

Published On 2020-11-09 12:10 GMT   |   Update On 2020-11-09 12:10 GMT
திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்குள் முக கவசம் அணிந்து வரும்படி கூறியதால் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருப்பூர்:

திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்குள் முக கவசம் அணிந்து வரும்படி கூறியதால் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் குமரன் ரோட்டில் ‘பிக்பாஸ்’ என்ற பெயரில் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் திருப்பூரை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 20) என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜவுளிக்கடைக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த எம்.கிஷோர்குமார்(20), எஸ்.சஜித் (21) ஆகிய 2 பேர் சென்றனர்.

முககவசம் அணியாமல் வந்த அவர்கள் இருவரையும், முககவசம் அணிந்து உள்ளே வருமாறு பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரவீன்குமாருடன் அவர்கள் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் மோதலாக மாறவே, பிரவீன்குமாரை அவர்கள் 2 பேரும் சேர்ந்து தாக்க முயன்றனர்.

இதைப்பார்த்த பிரவீன்குமாரின் நண்பர்களான சாமுண்டிபுரம் ஜி.கே.கார்டனை சேர்ந்த கே.ராஜேஸ்வரன் (23) , பி.நவாஜ் (27) , மாஸ்கோ நகரை சேர்ந்த எஸ்.மகேஷ்குமார் (24) ஆகியோர் அங்கு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது கிஷோர்குமார், சஜித் இருவரும் சேர்ந்து பிரவீன்குமாரின் நண்பர்கள் 3 பேரையும் கத்தியால் குத்தினர்.

இதில் அவர்கள் காயமடைந்தனர். மேலும் பிரவீன்குமாரின் நண்பர்கள் தாக்கியதில் சஜித், கிஷோர்குமாரும் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம்பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News