செய்திகள்
ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2020-11-09 03:57 GMT   |   Update On 2020-11-09 03:57 GMT
திற்பரப்பு அருவியில் தற்போது சாரல் மழையுடன் ‘குளு... குளு... சீசன்’ நிலவுவதையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால், குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெறுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு நீச்சல் குளம், சிறுவர் பூங்கா, படகு போக்குவரத்து போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அருவியின் அருகே சிவராத்திரி ஓட்டத்தின் 3-வது சிவாலயமான மகாதேவர் கோவில் உள்ளது.

திற்பரப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் நீச்சல் குளத்தில் குளிப்பதோடு படகு தளத்தில் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். மேலும், அருகில் உள்ள மகாதேவர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு குதூகலத்துடன் வீடு திரும்புவார்கள்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அத்துடன் அந்த பகுதியில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால் ‘குளு... குளு...’ சீசன் நிலவுகிறது.

விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக திற்பரப்புக்கு வந்தனர். அவர்கள் அருவிக்கு சென்று குளிக்க முற்பட்டனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேரூராட்சி ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால், அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில், ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் தொலைவில் நின்று அருவியின் அழகையும், பாறைகளின் இடையே தண்ணீர் பாய்ந்து செல்வதையும் பார்த்து ரசித்துவிட்டு திரும்பினர். சிலர் அருகில் இருந்த மகாதேவர் கோவிலில் சாமி கும்பிட சென்றனர்.
Tags:    

Similar News