செய்திகள்
விபத்து

கரூர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலி

Published On 2020-10-31 12:09 GMT   |   Update On 2020-10-31 12:09 GMT
கரூர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கணக்குவேலன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 54). விவசாயியான இவர், நேற்று மதியம் தனது மொபட்டில் கணக்குவேலன்பட்டியில் இருந்து மலைக்கோவிலூருக்கு சென்றார். பின்னர் அதே மொபட்டில் திரும்பி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் தேரப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் பழனிசாமி மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனிசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 63). இவர் தமிழ்நாடு காகித ஆலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை தனது மகளை கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையத்தில் தனது சைக்கிளில் கொண்டுபோய் இறக்கி விட்டார். பின்னர் அதே சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மாரிமுத்து ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நொய்யல் அருகே உள்ள உள்ள கரூர் திருச்சி மெயின் ரோடு கருப்பண்ண கவுண்டர்புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (31). இவரது தந்தை ரெங்கசாமி (60). கரூர் பசுபதிபாளையம் அருகே குளந்தானூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (36). கரூர் அருகே கருப்பண்ண கவுண்டர்புதூர் பகுதியை சேர்ந்த மற்றொரு சரவணன் (31). இவர்கள் 4 பேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பரமத்திவேலூர் சென்றுவிட்டு மீண்டும் அவர்களது ஊருக்கு மோட்டார் சைக்கிள்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுப்பாளையம் அருகே செங்காட்டனூர் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதி வேகமாக வந்த கார் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து 4 பேரையும் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரெங்கசாமி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News