செய்திகள்
ரவுண்டானாவை படத்தில் காணலாம்.

பிள்ளையார்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானா அழகுபடுத்தப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-10-28 12:31 GMT   |   Update On 2020-10-28 12:31 GMT
பிள்ளையார்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானா அழகுபடுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பிள்ளையார்பட்டி:

தஞ்சை மருத்துவக்கல்லூரி ரோட்டில் இருந்து பிள்ளையார்பட்டி செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி புறவழிச்சாலையில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைந்துள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் இருந்து இந்த ரவுண்டானாவை கடந்து பிள்ளையார்பட்டி, வல்லம் வழியாக திருச்சி மார்க்கமாக செல்லலாம். இதேபோல் வல்லம், பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் புறவழிச்சாலை வழியாக கும்பகோணம் மார்க்கத்தில் செல்லலாம்.

அதேபோல் திருவையாறு, அரியலூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தஞ்சை நகருக்குள் வராமல் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளுக்கு இந்த புறவழிச்சாலை வழியே செல்லலாம். இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த புறவழிச்சாலையில் ரவுண்டானா அமைந்துள்ளது. இந்த ரவுண்டானா அமைக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் அப்படியே கிடக்கிறது. ரவுண்டானாவை சுற்றிலும் செம்மண் அடித்த நிலையில் அப்படியே விட்டு விட்டனர். இந்த இடத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புற்கள் வளர்த்தும், அழகு தரும் பூச்செடிகள் நட்டும் இந்த ரவுண்டானாவுக்கு அழகு சேர்க்கலாம்.

ஆனால் என்ன காரணத்தாலோ இந்த ரவுண்டானா அழகுபடுத்தப்படாமலும், முறையாக பராமரிக்கப்படாமலும் அப்படியே உள்ளது. பெரிய, பெரிய நகரங்களில் உள்ள ரவுண்டானாக்களில் பூச்செடிகள், புற்கள் வளர்த்து அழகு சேர்க்கப்பட்டுள்ளது. அந்த ரவுண்டானாக்களை பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அதேபோல் பிள்ளையார்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானாவையும் அழகுபடுத்தி பராமரிக்கும் பணியை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகி தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News