செய்திகள்
இடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரியஒளி மின் தகடுகளை காணலாம்

இடுவாய் பகுதியில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கும் பணி தீவிரம்

Published On 2020-10-24 05:31 GMT   |   Update On 2020-10-24 05:31 GMT
திருப்பூர் அருகே இடுவாய் பகுதியில் 6.8 மெகாவாட் திறனுடன் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு தேவையான மின்சாரத்தை சூரியஒளி மூலமாக தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சூரியஒளி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் ஆலை இடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4.8 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்சார ஆலை ரூ.31 கோடியே 14 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 81 லட்சத்து 46 ஆயிரத்து 800 யூனிட் மின்சாரம் சராசரியாக தயாரிக்கும் திறனுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இடுவாய் பகுதியில் இதற்காக 23.60 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு சூரியஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டன. மின்சாதன தொழில்நுட்ப உபகரணங்கள், மின்மாற்றி மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் மற்றும் மின்அறை, கட்டுப்பாட்டு அறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின்வாரியத்துடன் இணைப்பு செய்ய மின்பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. மின்வாரியத்தின் துணை மின் நிலையத்துடன் இணைப்பு செய்யும் பணிகள் நடக்கிறது. இதுவரை 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

இதுபோல் இடுவாயில் 14.69 ஏக்கர் பரப்பளவில் 2 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.13 கோடியே 61 லட்சமாகும். ஆண்டுக்கு 16 லட்சத்து 64 ஆயிரத்து 400 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. சூரியஒளி மின் தகடுகள் பொருத்தப்பட்டு மின்சாதன தொழில்நுட்ப உபகரணங்கள், மின்மாற்றி, கட்டுப்பாட்டு சாதனங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

மின்வாரியத்தின் துணை மின் நிலையத்துடன் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. 76 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த இரு மின்ஆலைகளும் செயல்பாட்டுக்கு வரும்போது மாநகராட்சியின் மின்கட்டண சுமை மிகப்பெரிய அளவில் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர அரசு கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியஒளி மின்தகடுகள் பொருத்தப்படுகிறது. அதன்படி ரூ.2 கோடியே 65 லட்சத்தில் இந்த பணிகள் நடந்துள்ளன. மாநகராட்சி பகுதியில் 51 பள்ளி கட்டிடங்கள், 5 அலுவலக கட்டிடங்கள், 5 மருத்துவமனைகள், 2 வணிக வளாகங்கள், 6 நீரேற்று அறைகள், 5 சமுதாய கூடங்கள், 4 நீரேற்று நிலையங்கள், ஒரு கல்லூரி கட்டிடத்தில் சூரியஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில் 81 கட்டிடங்களில் 302 கிலோவாட் திறன் கொண்ட மின்தகடுகள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்படுகிறது.

இந்த பணிகள் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.
Tags:    

Similar News