செய்திகள்
மல்லிகை பூ

நாமக்கல்லில் நவராத்திரியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு

Published On 2020-10-22 09:37 GMT   |   Update On 2020-10-22 09:37 GMT
நவராத்திரியையொட்டி நாமக்கல்லில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, அணியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளன. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

அந்த வகையில் நேற்று நாமக்கல் பூ மார்க்கெட்டில் நவராத்திரியையொட்டி பூக்கள் விற்பனை சூடுபிடித்தது. கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ.340-க்கும், ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ நேற்று கிலோ ரூ.120-க்கும் விற்பனையாகின.

இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.140-க்கு விற்பனையான முல்லை பூ நேற்று கிலோ ரூ.280-க்கும், கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி பூ நேற்று கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மல்லிகை பூ வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த வாரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.440-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரியையொட்டி கோவில்களில் பூஜை நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்து அதன் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து இருப்பதாகவும், ஆயுதபூஜை முடியும் வரை பூக்களின் விலை அதிகரித்தே காணப்படும் எனவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News