செய்திகள்
கோப்புபடம்

பள்ளிக்கு வந்து விட்டு வீடு திரும்பிய 2 ஆசிரியைகளிடம் கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2020-10-22 07:26 GMT   |   Update On 2020-10-22 07:26 GMT
பள்ளிக்கு வந்து வீடு திரும்பிய 2 ஆசிரியைகளிடம் கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெள்ளியணை:

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருகே உள்ள ஏமூர் ஊராட்சி சீத்தப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த மணிமேகலை என்பவர் தலைமை ஆசிரியையாகவும், தொழில் பேட்டையை சேர்ந்த ரமா பிரியா என்பவர் உதவி ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு பணிகள் காரணமாகவும் ஆசிரியர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியைகள் மணிமேகலை மற்றும் ராமபிரியா இருவரும், பணி முடித்து தங்களது ஸ்கூட்டர்களில் ஏமூர் சாலையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களை பின்தொடர்ந்து, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர், அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் ஆசிரியைகளின் ஸ்கூட்டர்களை வழிமறித்தனர். பின்னர், கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் 2 பேரும் அணிந்திருந்த தங்கச்சங்கிலிகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். ஆசிரியர்களிடம் மொத்தம் 14 பவுன் தங்கசங்கிலிகள் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆசிரியைகள் தனித்தனியாக வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News