செய்திகள்
அலகுமலையில் நடைபெற்ற கால்நடை சந்தையை காணலாம்

அலகுமலையில் கால்நடை சந்தை- முதல்நாளில் ஏராளமான மாடுகள் விற்பனை

Published On 2020-10-13 10:33 GMT   |   Update On 2020-10-13 10:33 GMT
பொங்கலூர் அருகே அலகுமலையில் சுங்ககட்டணம் வசூலிக்காமல் கால்நடை சந்தை தொடங்கியது. இந்த சந்தைக்கு ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
பொங்கலூர்:

பொங்கலூர் அருகே அலகுமலையில் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் கால்நடை சந்தை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்றுகாலை கால்நடை சந்தை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கால்நடை சந்தையை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சிவாசலம் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து கால்நடை சந்தைக்கு மாடுகள், ஆடுகள் கோழிகள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளை கொண்டு வந்திருந்தனர். இதனை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். கால்நடை சந்தைக்கு வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட்டது. கால்நடை சந்தைக்கு வந்த அவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த சந்தைக்கு கால்நடைகளை கொண்டு வருபவர்களிடம் சுங்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. சேவை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த கால்நடை சந்தை முதல் நாளிலேயே ஏராளமான கால்நடைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இனி அடுத்து வரும் திங்கட்கிழமை முதல் இந்த சந்தைக்கு திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வருவார்கள் என்று ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News