செய்திகள்
ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதை காணலாம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2020-10-12 09:58 GMT   |   Update On 2020-10-12 09:58 GMT
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்:

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதையை தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் கண்காணித்து வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 22 ஆயிரத்து 969 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 24 ஆயிரத்து 36 கனஅடியாக அதிகரித்தது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
Tags:    

Similar News