செய்திகள்
கோப்புபடம்

ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-10-12 09:38 GMT   |   Update On 2020-10-12 09:38 GMT
கோவில் நிலத்தை மீட்கக்கோரி ஆண்டிபாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
வீரபாண்டி:

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டு காலம் புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் சித்திரை மாத திருவிழா 2 வாரம் நடைபெறும். இந்த திருவிழாவில், ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்தூர்புதூர் ஆகிய 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொண்டாடும் பெரும் விழாவாக நடைபெற்று வருகிறது.

மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் 11.16 ஏக்கரில் 9 ஏக்கர் நிலத்தை போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநகர போலீசுக்காக 2013 முதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவில் பயன்பாட்டுக்கு, நிலம் வேண்டும், கோவில் நிலத்தை போலீஸ் துறைக்கு வழங்கக்கூடாது, என 5 ஊர் பொது மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்தூர் புதூர் ஆகிய பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி, தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைவருக்கும் நோட்டீசும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News