செய்திகள்
கோப்புப்படம்

முக கவசம் அணியாமல் சென்றவரிடம் சாதி பெயரை கேட்டதால் சர்ச்சை- போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்

Published On 2020-10-09 06:13 GMT   |   Update On 2020-10-09 06:13 GMT
திருப்பூரில் முக கவசம் அணியாமல் சென்றவரிடம் சாதி பெயரை கேட்டது தொடர்பாக போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்:

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவ்வாறு முக கவசம் அணியாமல் பொது இடங்களில் திரிபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவரிடம் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் அபராதம் விதிக்க அவருடைய விவரங்களை சேகரிக்கும் போது சாதியின் பெயரை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது சாதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுவது வழக்கம். ஆனால் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் சாதி பெயர் கேட்பது விமர்சனத்துக்கு உள்ளானது.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில் போலீஸ்காரர் சர்ச்சை வீடியோ தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். அதன்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அந்த சர்ச்சைக்குரிய போலீஸ்காரர் இன்று ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் தெரிவித்தார்.
Tags:    

Similar News