செய்திகள்
கைது

சங்கரன்கோவிலில் குடிபோதையில் ஆம்புலன்சை நிறுத்தி டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

Published On 2020-10-06 06:27 GMT   |   Update On 2020-10-06 06:27 GMT
சங்கரன்கோவிலில் குடிபோதையில் ஆம்புலன்சை நிறுத்தி டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை சேர்ந்த ஆம்புலன்ஸ் வாகனம் நேற்று கடையநல்லூர் அருகில் நடந்த விபத்தில் காயம்பட்டவரை கொண்டு சேர்த்துவிட்டு சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

வாகனத்தை நவநீத கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர் ஒட்டினார். அவருடன் செவிலியர் கார்த்திகேயன் என்பவரும் வந்துள்ளார். அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது அங்கு போதையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த பகுதியில் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தடுத்து நிறுத்திய அவர்கள் எங்கு செல்கிறீர்கள் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் செவிலியரை மிரட்டி ஆம்புலன்ஸ் டிரைவரை சரமாரியாக தாக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை பிடுங்கி கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த போக்குவரத்து காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் சாவியை மர்ம நபர்களும் தூக்கி சென்றதால் ஆம்புலன்ஸ் வாகனம் ரெயில்வே பீடர் ரோட்டில் நிறுத்தப்பட்டது. காயமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

இச்சம்பவத்தால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு வந்த போதும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் சங்கரன்கோவில் செக்கடிதெருவை சேர்ந்த கண்ணன் (30) முத்துப்பாண்டி (20)சங்குபுரம் பகுதியை சேர்ந்த முனியராஜ் (30) ஆகிய 3 பேரை கைது செய்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News