செய்திகள்
ஈஷா நர்சரியில் சத்குரு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 1.16 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

Published On 2020-10-01 07:25 GMT   |   Update On 2020-10-01 07:25 GMT
மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 23 மாவட்டங்களில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
கோவை:

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் மரம்சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு சத்குரு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு பிறகு தமிழக விவசாயிகள் மத்தியில் மரம் வளர்க்கும் ஆர்வம் பெருமளவு அதிகரித்துள்ளது. இதன்விளைவாக, நடப்பாண்டில் மட்டும் இவ்வியக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 84 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர்.

இந்நிலையில், கிராமப்புற மேம்பாட்டுக்காக வலுவாக குரல் எழுப்பிய நம் தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில், 50 இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட உள்ளது.  சுமார் 285 ஏக்கர் விவசாய நிலங்களில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட உள்ளனர். குறைந்தபட்சம் 400 மரங்கள் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் மரங்கள் வரை விவசாயிகள் நட உள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, வேங்கை போன்ற விலை மதிப்புள்ள டிம்பர் மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு சுற்றுச்சூழலும் தானாக மேம்படும்.  

அனைத்து மரக்கன்றுகளையும் விவசாயிகள் ஏற்கனவே ஈஷா நர்சரிகளில் இருந்து எடுத்து சென்றுள்ளனர். மரம் நடும் நிகழ்வின்போது விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று வழங்க உள்ளனர். 

இதேபோல், கடந்த மாதம் மரம் தங்கசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 26 ஆயிரம் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News