search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவேரி கூக்குரல் இயக்கம்"

    • கருத்தரங்கில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து முன்னோடி சந்தன மர விவசாயிகள் பங்கேற்றனர்.
    • திருப்பூர் மாவட்டத்தின் ஆட்சியர் கிறிஸ்துராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை சிறப்பித்து வைத்தார்.

    பல்லடம்:

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'கோடிகளை கொடுக்கும் சந்தனம் - சாமானியர்களுக்கும் சாத்தியம்' என்ற மர விவசாய் கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. முன்னோடி விவசாயி துரைசாமி அவர்களின் 50 ஏக்கர் சந்தன பண்ணையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 3,000 விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

    தொடக்க விழா நிகழ்வில் தமிழக விவசாய சங்க தலைவர் கு. செல்லமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில், "விவசாயிகளின் மனதில் மரம் நடும் எண்ணத்தை ஈஷா விதைத்து இருக்கிறது. ஈஷா என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் விவசாய நிலங்களில் மரம் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது.

    இந்த நிகழ்ச்சி நடைபெறும் தோட்டத்தின் உரிமையாளர் துரைசாமி சந்தன மரங்களை நட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அவர் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிடுவார். இக்கருத்தரங்கும் விழிப்புணர்வும் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் தமிழக விவசாயிகள் கடனாளியாக இருக்க வேண்டிய தேவை இருந்து இருக்காது. எனவே, வரும் தலைமுறை விவசாயிகள் எதிர்காலத்தில் கடன் இன்றி, மானம் மரியாதையுடன் கெளரவமாக, பணக்காரர்களாக வாழ வேண்டும் என்றால் காவேரி கூக்குரல் சொல்லும் மரம் நடும் வழிமுறைகளை முழு மனதாக ஏற்று செயலாற்ற வேண்டும்" என்றார்.

    வனம் இந்தியா அறக்கட்டளையின் செயலாளர் சுந்தரராஜன் பேசுகையில், "ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கமும் வனம் இந்தியா அமைப்பும் பூமி தாயின் பசுமை போர்வையை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது" என கூறினார்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், "உலகிலேயே மிக விலை உயர்ந்த மரம் சந்தன மரம் தான். இம்மரத்தை வளர்ப்பதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மரத்தில் இருந்து மட்டும் குறைந்தபட்சம் ரூ.2 லட்சமும், 25 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலும் விவசாயிகள் சம்பாதிக்க முடியும். சந்தன மரத்தை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்க முடியும். இம்மரம் உப்பு தண்ணீரிலும் கூட வளரும் சாத்தியம் உள்ளது.

    இம்மரத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருந்தும் திருட்டு பயம் காரணமாக இதை வளர்க்க தயங்குகின்றனர். ஆனால், தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் மைக்ரோ சிப், சென்சார் மற்றும் ரேடார் தொழில்நுட்பம் என பல்வேறு விதமான தொழில்நுட்ப கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இன்னும் பல கருவிகள் வந்துவிடும். எனவே, சந்தன மரத்தை பயமின்றி நடவு செய்யலாம்.

    இந்திய சந்தனத்திற்கு உலகளவில் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. 1950-ம் ஆண்டுகளில் சுமார் 4,000 டன் வரை சந்தனத்தை நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டினோம். ஆனால், தற்போது நம்முடைய உள்நாட்டு தேவைக்கு கூட வெளிநாடுகளில் இருந்து சந்தனத்தை இறக்குமதி செய்து வருகிறோம். எனவே சந்தன மரத்திற்கான தேவை நம்மிடம் அதிகம் இருக்கிறது. அதை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டில் விவசாயிகள் அதிகளவில் சந்தன மரங்களை வளர்க்க வேண்டும்.

    சந்தன மரத்தை வெட்டி விற்பனை செய்வதில் உள்ள சட்ட சிக்கல்களும் படிப்படியாக நீங்கி வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் கூட வன சட்டங்கள் எதுவும் விவசாய நிலங்களுக்கு பொருந்தாது என கூறியுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் தாங்கள் விரும்பும் எந்த வகையான மரத்தையும் தங்கள் நிலங்களில் வளர்த்து விற்க முடியும். எனவே, விவசாயிகள் கோடீஸ்வரர்களாக ஆக மாறுவதற்கு சந்தன மரம் வளர்ப்பது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்" என்றார்.

    இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து மரம் சார்ந்த விவசாய விஞ்ஞானிகளும், முன்னோடி மர விவசாயிகளும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

    குறிப்பாக, பெங்களூரு IWST நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற விஞ்ஞானி டாக்டர் சுந்தரராஜ் சந்தன மரத்தை நடவு முதல் விற்பனை செய்வது வரை உள்ள அனைத்து முக்கிய அம்சங்கள் குறித்தும் விரிவாக பேசினார். கேரளாவைச் சேர்ந்த வன அதிகாரி வினோத் குமார் 'சந்தனத்தின் உலகளாவிய தேவை' என்ற தலைப்பிலும், காரைக்குடி விவசாயி ராமன் 'மானாவாரி நிலத்தில் செம்மர வளர்ப்பு' என்ற தலைப்பிலும் பேசினர்.

    இதுதவிர, முன்னோடி சந்தன மர விவசாயிகள் கவிதா மிஸ்ரா (கர்நாடகா), இஸ்தரப்பு ரெட்டி (தெலுங்கானா), ரமேஷ் பலூடகி (கர்நாடகா), நிலத்தின் உரிமையாளரும் முன்னோடி சந்தன மர விவசாயியுமான துரைசாமி உள்ளிட்டோர் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர்.

    • விவசாயிகளால் தான் இயற்கையை காக்க முடியும்.
    • இந்த ஆண்டு 10 கோடி மரக்கன்றுகளை நட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. சுமார் 2,000 விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    மரங்கள் வளர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயா பிறந்த ஊரில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மிளகு, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பயிர்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில் தான் வளரும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், வெப்பம் அதிகம் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சமவெளியில் மிளகு சாகுபடி செய்து அதில் நன்கு லாபமும் பார்த்து வருகின்றனர்.

    விவசாயிகளாகிய உங்களால் தான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காக்க முடியும். வெப்பமயமாதல் என்னும் பிரச்சினை உலகளவில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதை தடுப்பதில் மரங்கள் வளர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் விவசாயிகளாகிய நீங்கள் முன் களப் பணியாளர்களாக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறனின் வேண்டுகோளின்படி, சந்தன மரங்களை வளர்ப்பதிலும், அதை வெட்டுவதிலும் விவசாயிகள் சந்திக்கும் இடர்பாடுகளை நீக்குவதற்கு தமிழக முதல்வருடன் நான் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்வேன்.

    தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு 10 கோடி மரக்கன்றுகளை நட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழ்நாடு கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் பேசுகையில், "சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் வருமானத்தையும் ஒரு சேர அதிகரிப்பதற்கு மரம்சார்ந்த விவசாய முறை தான் சிறந்த தீர்வு. மரப் பயிருக்கு மாறும் விவசாயிகள் அதை அறுவடை செய்யும் போது லட்சங்களிலும் கோடிகளிலும் லாபம் எடுக்க முடியும். அதேசமயம் அறுவடை காலம் வரை அவர்கள் காத்திருக்காமல் மரம் நட ஆரம்பிக்கும் சமயத்தில் இருந்தே தொடர் வருமானம் பார்க்கும் பல்வேறு வழிமுறைகள் நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம்.

    குறிப்பாக, சமவெளியில் மரங்களுக்கு இடையே மிளகு சாகுபடி செய்வது குறித்து கடந்த 6 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறோம். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற நறுமணப் பயிர்களையும் மரங்களுக்கு இடையே ஊடுப் பயிராக வளர்த்து விவசாயிகள் தொடர் வருமானம் பார்க்க முடியும்.

    வெற்றி விவசாயிகளிடம் இருந்து அந்த வழிமுறைகளை மற்ற விவசாயிகள் அறிந்து கொள்வதற்காகவே இப்பயிற்சி நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இதுதவிர, காய்கறிகள், மஞ்சள், வாழை, சிறுதானியங்கள், கால்நடை வளர்ப்பு என பல வழிகளில் மரம்சார்ந்த விவசாய முறையில் வருமானம் பார்க்க முடியும்." என்றார்.

    இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் வல்லுனர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமவெளியில் நறுமணப் பயிர்களை சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்று மற்ற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

    குறிப்பாக, இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR – IISR) சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன், திருச்சூரைச் சேர்ந்த ஜாதிகாய் விவசாயி திருமதி. சொப்னா சிபி கல்லிங்கள், மதுரையைச் சேர்ந்த தேனீ வளர்ப்பு பயிற்சியாளர் திருமதி ஜோஸ்பின் மேரி, நிகழ்ச்சி நடந்த தோட்டத்தின் உரிமையாளரும் முன்னோடி விவசாயியுமான திரு.செந்தமிழ் செல்வன் உட்பட ஏராளமான விவசாயிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    • சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வன் அவர்களது மிளகுத் தோட்டத்தில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
    • ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது.

    சென்னை:

    காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு வரும் ஜூலை 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஜூலை 14) நடந்தது. இதில் பங்கேற்ற காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது:

    இக்கருத்தரங்கில் சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற பயிர்களை வெற்றிகரமாக பயிர் செய்துள்ள விவசாயிகளும், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR – IISR) சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன் ஆகியோர் கலந்து கொண்டு சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.

    இக்கருத்தரங்கு சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வன் அவர்களது மிளகுத் தோட்டத்தில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மிளகு சாகுபடி செய்து வரும் இவர், தேக்கு, பலா, கிளைரிசிடியா, செங்கல் தூண் மற்றும் இரும்பு வலைகளிலும் மிளகு வளர்த்து வருகிறார். இரண்டு ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து வருடத்திற்கு நான்கு லட்சம் லாபம் ஈட்டுகிறார்.

    மரப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர் வருமானம் பெறும் வழிமுறைகளை காவேரி கூக்குரல் இயக்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. மரப்பயிர்களில் ஊடுபயிராக காய்கறிகள், சிறுதானியங்கள், நறுமணப்பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகளை பல விவசாயிகள் செய்து வருகிறார்கள்.

    இதனால் மரப்பயிர்களின் அறுவடை வரை வருமானத்திற்கு காத்திருக்காமல் ஊடுபயிர்கள் மூலமே தொடர் வருமானம் பெறுகிறார்கள். பெரும்பாலான நறுமணப் பயிர்கள் மரங்களுக்கு கீழே குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்கூடியதாக உள்ளதால் சரியான சூழ்நிலையை உருவாக்கி மர விவசாயிகள் அதிக வருமானம் பெற இயலும்.

    ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது மற்ற நறுமணப்பயிர்களும் சமவெளியில் நன்கு வளர்வதால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சியை காவேரி கூக்குரல் நடத்துகிறது.

    விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்து அறிந்துகொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் அவர்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ளமுடியும். பயிற்சியில் கலந்து கொள்ள 94425 90079 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாயிகள் வள்ளுவன் மற்றும் திருமலை ஆகியோர் பங்கேற்றனர். கடலூரைச் சேர்ந்த விவசாயி திருமலை அவரது தோட்டத்தில் கடந்த 15 வருடங்களாக மிளகு சாகுபடி செய்கிறார். டிம்பர் மரங்கள், தென்னை, கிளைரிசிடியா, பனை மற்றும் முந்திரி மரங்களிலும் மிளகு வளர்த்துள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்த வள்ளுவன் தென்னை மரங்களுக்கிடையே ஜாதிக்காய் நடவுசெய்து வெற்றிகரமாக வருமானம் ஈட்டிவருகிறார். இவர் 6 வருடங்களுக்கு முன் ஈஷா நடத்திய மிளகு சாகுபடி பயிற்சியில் கலந்து கொண்டபின் மிளகு நட்டு தற்போது வெற்றிகரமாக மிளகு அறுவடை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
    • நொய்யல் நதியை புத்துயிரூட்டும் பணியில் தமிழ்நாடு அரசுடன் ஈஷாவும் இணைந்து செயல்பட உள்ளது.

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது காவேரி கூக்குரல் இயக்கம். இதன் ஒரு பகுதியாக கோவையில் நரசீபுரம் பகுதியிலுள்ள சாமிநாதனின் பண்ணையில் இன்று(ஜூன் 5) மரக் கன்று நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், அரோமா நிறுவன நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி, சுவாமி அஜய் சைதன்யா, நொய்யல் டிரஸ்ட், மணிகண்டன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, வெள்ளியங்கிரி உழவன் FPO இயக்குனர் கிருஷ்ணசாமி, சிறுதுளி அமைப்பின் பொறுப்பாளர் வனிதா மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் பேசுகையில், "ஈஷாவின் பசுமை தொண்டாமுத்தூர் திட்டத்தின் மூலம் தொண்டாமுத்தூரில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. பசுமை பரப்பை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் இப்பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும். குறிப்பாக, நொய்யல் வடிநிலப் பகுதிகளிலும், அதில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய அதிகளவு மரங்களை நட வேண்டும். பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், காவேரி கூக்குரல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான இன்று என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

    கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்து வரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டு இலக்கு 1.1 கோடி மரங்களை நடுவது. தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

    அதன்படி, ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட்டன. சுமார் 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடுகின்றனர். இதுதவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை புத்துயிரூட்டும் பணியில் தமிழ்நாடு அரசுடன் ஈஷாவும் இணைந்து செயல்பட உள்ளது. அதன் தொடக்கமாக, நொய்யல் உற்பத்தியாகும் சாடிவயல் பகுதியில் முதல் 4 கி.மீ தூரம் வரை பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் இன்று தொடங்கி வைத்தார்.

    இதில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

    'நடந்தாய் வாழி காவேரி' என்னும் தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டும் இந்த நீண்ட கால பணியில் ஈஷா உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் கரம்கோர்த்துள்ளன. அதன்படி, நொய்யல் நதியின் முதல் 4 கி.மீ தூரத்திற்கான பணி ஈஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஈஷாவின் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், காவேரி கூக்குரல் இயக்கம் போன்ற அமைப்புகள் நொய்யல் நதியில் சாக்கடை கழிவுகள் சேர்வதை தடுப்பது, நீர் வளம் அதிகரிக்க நதியின் வடிநில பகுதியில் தேவையான எண்ணிக்கையில் மரங்கள் நடுவது, குப்பைகள் சேராமல் தடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளன. இதற்கு முன்பு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'பசுமை தொண்டாமுத்தூர்' என்னும் பெயரில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலங்களில் 4 லட்சம் மரங்களை நடும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர். விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை மிகக்குறைந்த விலையான 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.

    • 50-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பலா உணவுப் பொருட்களின் கண்காட்சி இத்திருவிழாவில் இடம்பெற உள்ளது.
    • காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பலா திருவிழா நடத்தப்படுகிறது.

    விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் வரும் மே 28-ம் தேதி மாபெரும் பலா திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு முன்னோடி விவசாயிகள் மற்றும் வல்லுர்கள் பங்கேற்று பலாவில் இருந்து பத்து தலைமுறைக்கு லாபம் எடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

    இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறுகையில், "மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுச்சூழலையும் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் ஒரு சேர முன்னேற்றும் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, லாபகரமாக விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டத்திலேயே புது விவசாயிகளை அழைத்து பயிற்சி வகுப்புகளையும், கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.

    அந்த வகையில் இம்மாதம் பண்ருட்டியைச் சேர்ந்த முன்னோடி பலா விவசாயியும் வேளாண் துறையின் முன்னாள் துணை இயக்குநருமான ஹரிதாசின் தோட்டத்தில் இந்த பலா திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளோம். ஹரிதாஸ் '100 வகை பலா, 100 விதமான சுவை' என்ற தலைப்பில் பேச உள்ளார். இந்திய உணவு பதப்படுத்துதல் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர் டாக்டர் ஜெகன் மோகன், பலாவை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவது குறித்தும், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர் டாக்டர் கருணாகரன், சிவப்பு பலாவின் சிறப்புகள் குறித்தும் பேச உள்ளனர்.

    மேலும், முன்னோடி விவசாயி குமாரவேல், தென்னைக்குள் பலாவை நட்டு லாபம் எடுப்பது குறித்தும், முன்னோடி விவசாயி திருமலை மிளகு சாகுபடி குறித்தும், மதுரையைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி, தேனீ வளர்ப்பு குறித்தும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

    இதுதவிர, கேரளாவைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற ஜேம்ஸ் ஜோசப் 'பச்சை பலா மாவை தினமும் உணவோடு சேர்த்து உட்கொள்வதன் மூலம் 90 நாளில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சாத்தியம்' குறித்தும் பேச உள்ளார். மேலும், கேரளாவில் பலாவில் இருந்து தயாரித்த பொருட்களை சிறப்பாக சந்தைப்படுத்தி வரும் 'சக்கா கூட்டம்' என்ற குழுவினரின் பொருட்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பலா உணவுப் பொருட்களின் கண்காட்சியும் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளது.

    பலாவை நட்டு லாபம் பார்க்க விரும்பும் அனைத்து விவசாயிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் 94425 90079 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" என்றார்.

    • மரம் நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவில் உருவாகிவிட்டது.
    • இந்தியாவில் சுமார் 60 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து உள்ளனர்.

    "தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலங்களின் வரப்போரங்களில் 50 முதல் 100 மரங்களை வைத்தாலே 1000 கோடி மரங்களை வைத்துவிடலாம். அப்படி பார்க்கும் போது, விவசாயிகள் மனம் வைத்தால் 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை" என காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சங்கம் (சிபாகா) சார்பில் 'பசுமை தொண்டாமுத்துர்' திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் நிறைவு விழா கோவையில் இன்று (ஏப்ரல் 2) நடைபெற்றது.

    போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பாரதிய வித்யாபவன் தலைவர் திரு. கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள் ஒரு லட்சமாவது மரக்கன்றை நட்டு வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில் "சத்குரு அவர்கள் செய்வது ஒரு மகத்தான காரியம். அதில் சிபாகாவும் பங்கெடுத்துள்ளது. என்னை பொறுத்தவரை, மரம் நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவில் உருவாகிவிட்டது. எனவே, விழிப்புணர்வை தாண்டி அதை செயல்படுவதற்கான பொறுப்புணர்வையும், வைராக்கியத்தையும் வளர்க்க வேண்டிய தருணம் இது" என்றார்.

    இந்நிகழ்ச்சியில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் பேசுகையில், "மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது என கூறினார். அதுமட்டுமின்றி, அவர் தன் வாழ்நாளில் கிராம சுய ராஜ்ஜியம் குறித்து அதிகம் பேசியுள்ளார். கிராமங்களை முன்னேற்றினால் தான் நாட்டை முன்னேற்ற முடியும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதை நினைவும் கூறும் வகையில் ஒரு லட்சமாவது மரம் நடும் விழா இங்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இந்தியாவில் சுமார் 60 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது. விவசாயிகளின் பொருளாதாரம் மட்டுமின்றி, கிராமத்தின் சுற்றுச்சூழல், ஆரோக்கியம், மண் வளம், நீர் வளம் என அனைத்தையும் ஒருங்கிணைந்து முன்னேற்றுவதற்கு மரம்சார்ந்த விவசாய முறை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இதன்மூலம், விவசாயிகளின் பொருளாதாரம் 3 முதல் 8 மடங்கு வரை அதிகரித்து இருப்பதை நாங்கள் அனுபவப்பூர்வமாக பார்த்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. அதில் 30 லட்சம் ஹெக்டர் நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளது. ஒரு விவசாயி 50 முதல் 100 மரங்களை தன்னுடைய நிலங்களின் வரப்போரங்களில் நட்டாலே சுமார் 1000 கோடி மரங்கள் நடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை" என்றார்.

    இதேபோல், மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் பேசுகையில், "காவேரி கூக்குரல் இயக்கமானது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நடுவது என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. 'பசுமை தொண்டாமுத்தூர்' என்ற திட்டத்தின் கீழ் முதலில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஒரு லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகித்து நட வைத்தோம். அதை தொடர்ந்து இப்போது சிபாகாவின் உதவிடன் 2-வது ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அடுத்து இன்னும் 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து செய்து வருகிறோம். இவ்வாறு பல்வேறு சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்தால் 242 கோடி மரங்கள் நடும் பணியை மிக விரைவில் எளிதாக முடித்துவிடலாம்" என்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு அவர்களின் பேரனும், ஜி.டி வெல்லர் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான திரு.ராஜ்குமார் அவர்கள் பேசுகையில், "பொதுவாக வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுகிறது. பெங்களுரு போன்ற பெரு நகரங்கள் கான்கிரீட் காடுகளாக மாறி உள்ளன. இந்நிலையில், கோயம்புத்தூர் கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிபாகா நிர்வாகிகள், கோவை ரோட்டரி சங்க உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய கருத்தரங்கு சாத்தூரில் இன்று நடைபெற்றது.
    • வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்தால் விவசாயிகள் நல்ல வருமானம் பார்க்கலாம் என்றார் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ.

    சாத்தூர்:

    காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'லட்சங்களை கொட்டி தரும் மானாவாரி மரப் பயிர் சாகுபடி'என்ற தலைப்பிலான விவசாய கருத்தரங்கு சாத்தூரில் உள்ள ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நிகழ்ச்சியில் பேசியதாவது:

    33 சதவீதம் பசுமை பரப்பை அடைய வேண்டும் என்பது நம்முடைய இலக்காக உள்ளது. தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பு சுமார் 24 சதவீதமாக உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 3.8 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. அதை அதிகரிக்க எங்களால் முடிந்த செயல்களை நாங்கள் செய்து வருகிறோம்.

    என்னுடைய சட்டமன்ற தொகுதியில் 'வனத்திற்குள் விளாத்திக்குளம்'என்ற பெயரில் 5 ஆண்டுகளில் 1 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக 25 லட்சம் பனை விதைகளையும் நட உள்ளோம்.

    விவசாயிகள் ஆசைக்காக மரம் வைக்காமல், வாழ்விற்காக மரம் வைக்க வேண்டும். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மானாவாரி மாவட்டங்களில் நெல், வாழை போன்ற மரங்களை நட்டு சிரமப்படுவதற்கு பதிலாக வேப்பமரம், நாவல், பனை கொடுக்காப்புளி போன்ற மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அவை மானாவாரியில் நன்கு வளர்ந்து நல்ல வருமானமும் தரும்.

    நம் நாட்டிற்கு ஒரு நம்மாழ்வார் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நம்மாழ்வாராக உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுராம் பேசுகையில், "விவசாயிகள் விவசாயத்தை லாபகரமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக, கிராமங்களில் ஒரு வேப்பமரம் இருக்கும். அது எவ்வித பராமரிப்பும் இன்றி தானாக நன்றாக வளர்ந்து இருக்கும். அதேசமயம், ஏக்கர் கணக்கில் வேப்ப மரங்களை நாம் வளர்க்க விரும்பினால், நாம் எதிர்பார்ப்பதை போல் தானாக வளர்ந்துவிடாது. அதற்கென்று சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    அந்த வகையில், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் இக்கருத்தரங்கின் வல்லுநர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். மரம் வளர்ப்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது. எனவே, இந்த தொகுதியில் மரம் வளர்க்கும் பணியில் என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு முன்னோடி விவசாயிகளும், விஞ்ஞானிகளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    குறிப்பாக, ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநர் ராமமூர்த்தி வேப்ப மரத்தில் இருந்து லாபம் எடுக்கும் வழிமுறைகள் குறித்தும், தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் 'கொடுக்காப்புளி'மர வளர்ப்பு குறித்தும் பேசினர். பெங்களூருவில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராஜன் சந்தன மர வளர்ப்பு குறித்தும், செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் குருசாமி இலுப்பை மர வளர்ப்பு குறித்தும் பேசினர்.

    காவேரி கூக்குரல் இயக்கமானது மரம் சார்ந்த விவசாயம் குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வியக்கம் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களில் இதுவரை சுமார் 24 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக அனைத்து வகையான டிம்பர் மரக்கன்றுகளும் ரூ.3-க்கு விநியோகம் செய்யப்படுகிறது.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 37 மாவட்டங்களில் சுமார் 600 ஏக்கர் பரப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • சுமார் 1000 விவசாயிகள் பங்கேற்று மரக்கன்று நடும் பணியை மேற்கொண்டனர்.

    சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 2.5 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நடப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள 40 ஈஷா நாற்று பண்ணைகள் மூலம் தரமான டிம்பர் மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை அவர்களின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்த மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை இவ்வியக்கம் மேற்கொண்டது. தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். அதன்படி, மொத்தம் 37 மாவட்டங்களில் சுமார் 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் 1.85 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் சுமார் 1000 விவசாயிகள் பங்கேற்று கடந்த 29-ம் தேதி முதல் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர்.

    விவசாயிகளின் பொருளாதார தேவை மற்றும் அவர்களின் மண் மற்றும் நீரின் தன்மைக்கு ஏற்ப தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற பல்வேறு டிம்பர் மரங்களை வரப்போரம் தொகுப்பு மரங்களாகவும் நடவு செய்துள்ளனர். கடந்தாண்டு காந்தி ஜெயந்தியின் போது இதே போல் சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    ×