செய்திகள்
சேதமடைந்த தடுப்பணையை படத்தில் காணலாம்.

விஜயபுரம் கிராமத்தில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

Published On 2020-09-30 07:27 GMT   |   Update On 2020-09-30 07:27 GMT
விஜயபுரம் கிராமத்தில் சேதமடைந்துள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விஜயபுரம் கிராமத்தின் அருகே கல்லாற்றுக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால் உள்ளது. இந்த வரத்து வாய்க்காலில் மழைக்காலங்களில் தண்ணீர் வந்து கல்லாற்றில் சென்று கலக்கும்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விஜயபுரம் கிராமத்தின் அருகில் வரத்து வாய்க்காலின் இடையே ராவுத்தர் அணைக்கட்டு என்ற ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் தடுப்பணையில் தண்ணீர் தேங்கியதால், அந்த பகுதி கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது அந்த தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு, வரத்து வாய்க்காலில் வந்த தண்ணீர் முழுவதும் தேங்கி நிற்காமல் வெளியேறி விட்டது.

மேலும் தற்போது பெய்து வரும் மழைநீரும் தடுப்பணையில் தேங்காமல் முழுவதுமாக சென்று கல்லாற்றில் கலந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ராவுத்தர் அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று விஜயபுரம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News