செய்திகள்
கைது

சேலம் அருகே இளநீர் வியாபாரியை அடித்து கொன்ற மனைவி - மகன்கள் கைது

Published On 2020-09-24 07:55 GMT   |   Update On 2020-09-24 07:55 GMT
சேலம் அருகே சொத்து பிரச்சினையில் இளநீர் வியாபாரியை அடித்து கொன்ற மனைவி - மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கூடலூர் தாசன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 52).

இவர் ஆட்டையாம்பட்டி பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 22-ந் தேதி இரவில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சந்திரன், மனைவியுடன் தகராறு செய்தார். இதனை கண்ட அவரது மகன்கள் 2 பேரும் கண்டித்தனர். அப்போது அவர்களையும் ஆபாசமாக திட்டினார். இதனால் ஆத்திரம் அந்த 3 பேரும் கட்டையால் சந்திரனை சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மனைவி மற்றும் மகன்கள், கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததாக கூறி சந்திரனை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே சந்திரனின் தாய் பாப்பாத்தி (70) மகுடஞ்சாவடி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். இதில் தனது மகன் சந்திரனை மருமகள் ஜெயா மற்றும் பேரன்கள் ராஜ்குமார், லோகநாதன் ஆகியோர் தேங்காய் மட்டை, உருட்டுக்கட்டையால் தாக்கியதால் உயிர் இழந்து விட்டதாக கூறினார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜ்குமார் தனது திருமண செலவிற்காக தங்களது தோட்டத்திற்கான பத்திரத்தை அடகு வைத்த தாகவும், அதனை மீட்டு தருமாறு சந்திரன் அடிக்கடி கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததும் இதனால் ஏற்பட்ட மோதலில் சந்திரன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News