செய்திகள்
கோப்புபடம்

காதலித்து திருமணம் செய்த மனைவியை உறவினர்கள் பிரித்து சென்றதால் மணமகன் போராட்டம்

Published On 2020-09-12 13:22 GMT   |   Update On 2020-09-12 13:22 GMT
திண்டுக்கல் அருகே காதலித்து திருமணம் செய்த மனைவியை உறவினர்கள் பிரித்து சென்றதால் மணமகன் போராடிய காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள செப்புக்குட்டி பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சூர்யா (வயது 22). நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பட்ட படிப்பு முடித்துள்ளார். இவரும் கொடுமுடியைச் சேர்ந்த சின்னக்காளை மகள் வினோதினி (20) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன் பேரில் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து நண்பர்கள் உதவியுடன் ரெங்கமலை மல்லீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே தனது மகளை காணவில்லை என வினோதினியின் பெற்றோர் குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரில் தனது மகளை ஏமாற்றி சூர்யா திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சூர்யா மற்றும் வினோதினியை போலீசார் அழைத்து வந்தனர். அவர்கள் வினோதினியிடம் தனியாக பேசி பெற்றோருடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து வினோதினியை வலுக்கட்டாயமாக தங்களது காரில் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சூர்யா 3 ஆண்டுகள் காதல் வாழ்க்கை ஒரு நாள் திருமணத்தோடு முடிந்து விட்டதே என கதறி அழுது காரின் முன்பு போராட்டம் நடத்தினார். இதை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

போலீசாரும் சூர்யாவை அங்கிருந்து செல்லுமாறு கூறி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதாக தெரிவித்தனர். தனது மனைவியை வலுக் கட்டாயமாக பெற்றோர்கள் அழைத்து சென்றதைப் பார்த்து சூர்யா அதே இடத்தில் கண்ணீர் மல்க நின்று கொண்டு இருந்தது அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News