செய்திகள்
கைரேகை பதிவு வசதி கொண்ட புதிய விற்பனை எந்திரங்களை கலெக்டர் மலர்விழி வழங்கிய காட்சி.

ரேஷன் கடைகளுக்கு கைரேகை பதிவு வசதியுடன் விற்பனை எந்திரங்கள்- கலெக்டர் மலர்விழி வழங்கினார்

Published On 2020-09-11 09:42 GMT   |   Update On 2020-09-11 09:42 GMT
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கைரேகை பதிவு வசதியுடன் விற்பனை எந்திரங்களை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் அனைத்து ரேஷன் கடைகளிலும் இதுவரை பயன்பாட்டில் இருந்த விற்பனை முனைய எந்திரங்களை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பதிலாக கைரேகை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய 1048 புதிய விற்பனை எந்திரங்கள் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி புதிய விற்பனை முனைய எந்திரங்களை ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த புதிய முறைப்படி ரேஷன்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்த பின்னர் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தின்படி குடும்ப அட்டையில் பெயர் உள்ள ஏதாவது ஒரு நபரின் கைரேகையை பதிவு செய்தால் போதுமானது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்குவதில் முறைகேடுகள் முழுமையாக தடுக்கப்படும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தணிகாசலம் கூட்டுறவு சங்க சார் பதிவாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News