செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

அரியர் தேர்வு விவகாரத்தில் யூஜிசி நடைமுறைபடி தான் நடப்போம் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

Published On 2020-09-09 16:47 GMT   |   Update On 2020-09-09 16:47 GMT
அரியர் தேர்வு விவகாரத்தில் யூஜிசி குழு நடைமுறைபடி தான் நடப்போம் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
விழுப்புரம்:

விழுப்புரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

விழுப்புரம் நகர விரிவாக்க பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். ரூ.43 கோடி மதிப்பீட்டில் வீடுர் அணை மேம்படுத்தப்படும்.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வு தேவை.

தமிழகத்தில் பெற்றோரின் மனநிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனா பாதிப்பிலிருந்து படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும்.

கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு தேர்ச்சி தொடர்பாக வேண்டுமென்றே தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஏற்கெனவே தமிழக அரசின் நிலையைத் தெளிவுபடுத்தி விட்டார். யூஜிசி நடைமுறைப்படி தான் நடப்போம் என முன்பே கூறியுள்ளோம்.

நீட் விவகாரத்தைப் பொருத்தமட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு எனவும் உச்சநீதிமன்றம் வரை சென்றும் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. 2013 -ல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்று பணிக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News