செய்திகள்
ஆன்லைன் வகுப்பு

அரசு கலை கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு

Published On 2020-08-27 03:01 GMT   |   Update On 2020-08-27 03:01 GMT
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி, 3 லட்சத்து 16 ஆயிரத்து 795 மாணவ-மாணவிகள் விண்ணப்பப்பதிவு செய்திருந்தனர். அதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 832 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்தனர்.

இந்த நிலையில் அந்தந்த அரசு கலைக்கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலை வெளியிட வலியுறுத்தியும், அவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்குவது குறித்தும் அனைத்து அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்கு, கல்லூரி கல்வி இயக்குனர் சி.பூரணசந்திரன் நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2020-21-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்துவதற்கான பணிகளை (தரவரிசை மற்றும் தேர்வு பட்டியல் வெளியிடுவது) உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை பாடவாரியாக அந்தந்த மண்டல இணை இயக்குனர்களுக்கு ஒவ்வொரு நாளும் தெரிவிக்க வேண்டும்.

அதனை மண்டல இணை இயக்குனர்கள் கேட்டுப்பெற வேண்டும். கடந்த கல்வியாண்டில் (2019-20) பெறப்பட்ட கல்வி கட்டணத்தையே, நடப்பு கல்வியாண்டிலும் மாணவர்களிடம் இருந்து பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News