செய்திகள்
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

அரசு மருத்துவமனைகளில் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-08-25 22:43 GMT   |   Update On 2020-08-25 22:43 GMT
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா அல்லாத மற்ற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத மற்ற நோயாளிகளுக்கும் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு இருந்து வரும் காலத்திலும், கொரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் தமிழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் கூட, அரசு மருத்துவமனைகளில் உயரிய சேவைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 20 ஆயிரத்து 550 பேருக்கு ‘டயாலிசிஸ்’ செய்யப்பட்டுள்ளது. இதில் 1,077 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். 1,347 பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ செய்யப்பட்டுள்ளது.

மேலும் 439 நபர்களுக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 154 கர்ப்பிணிகளுக்கும், 37 ஆயிரத்து 436 குழந்தைகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பயன் அடைந்து உள்ளனர்.

பல்வேறு இடங்களில் 805 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 88 ஆயிரத்து 280 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொய்வில்லாமல் நடைபெற்றதன் காரணத்தினால், கொரோனா தொற்று காலத்தில் பல விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News