செய்திகள்
ரேசன் அரிசி பறிமுதல்

லாரியில் கடத்திய 30 டன் ரேசன் அரிசி பறிமுதல்- டிரைவர், கிளனர் கைது

Published On 2020-08-16 07:03 GMT   |   Update On 2020-08-16 07:03 GMT
கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு லாரியில் கடத்திய 30 டன் தமிழக ரேசன் அரிசியை லாரியுடன் கிருஷ்ணகிரியில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர், கிளனர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:

கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு லாரியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கோவை உட்கோட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, கோவை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு தலைமையில், பறக்கும் படை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், போலீசார் குப்பமுத்து, பிரசன்னா, ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.

அவர்கள் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 30 டன் எடை கொண்ட 600 மூட்டைகளில் தமிழக ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரி டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கொட்டாரக்குன்று கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 25), கிளனர் அவரது தம்பி கார்த்திக் (23) என்பது தெரியவந்தது.

இந்த ரேசன் அரிசி கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து கர்நாடக மாநிலம் தும்கூருக்கு கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர், கிளனர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலராமன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, லாரியை வட்டார போக்குவரத்து அலுவலரிடமும், பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை கிருஷ்ணகிரி நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலும் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரி, ரேசன் அரிசியின் மொத்த மதிப்பு ரூ.26 லட்சத்து 43 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக அரிசியின் உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News