செய்திகள்
கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே சந்தன மரகட்டைகளை கடத்த முயன்றவர் கைது

Published On 2020-08-12 08:46 GMT   |   Update On 2020-08-12 08:46 GMT
மூங்கில்துறைப்பட்டு அருகே சந்தனமர கட்டைகளை கடத்தி செல்ல முயன்றவரை கைது செய்த போலீசார் 10 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள காட்டுக்குளம் பகுதியில் மர்மநபர்கள் சந்தனமரங்களை வெட்டி கட்டைகளை கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருக்கோவிலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் போலீசார் மல்லாபுரம் பகுதியில் சாதாரண உடையில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தனகட்டைகளை கட்டாக தலையில் சுமந்து வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மல்லாபுரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 45) என்பதும், அங்குள்ள காட்டுக்குளம் பகுதியில் சந்தனமரங்களை துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்ய கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து சந்தனமர கட்டைகளுடன் அவரை வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ராமச்சந்திரனை கைது செய்து, அவரிடம் இருந்த 10 கிலோ சந்தனமர கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் இதற்கு முன்பு சந்தனமரங்களை வெட்டி கட்டைகளை கடத்தி சென்றாரா? சந்தமர கட்டைகளை விற்பனைக்காக எங்கே கொண்டு செல்ல இருந்தார்? வேறு ஏதேனும் கடத்தல் கும்பலுடன் ராமச்சந்திரனுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சந்தனமரங்களை வெட்டி கட்டைகளை கடத்தி செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்த சம்பவம் மல்லாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News