செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-08-10 12:47 GMT   |   Update On 2020-08-10 12:47 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:

மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக சென்று, முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்ட 6 மாதத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். தடுப்பணைகள் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் மற்றும் குளம், குட்டைகள் உள்ளன. அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு, வண்டல் மண்ணை விவசாய நிலத்துக்கு பயன்படுத்தி வருகிறோம். குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்காக தடுப்பணைகள் கட்டும் திட்டம் நிறைவேற்றம். 42,698 வீடுகளுக்கு ரூ.45.50 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சியில் 63 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு ரூ.235 கோடி அளவுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News