செய்திகள்
கைது

சூலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 19 பேர் கைது

Published On 2020-08-09 13:26 GMT   |   Update On 2020-08-09 13:26 GMT
சூலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சூலூர்:

சூலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த சூலூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சூலூரை அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு பின்புறம் அடர்ந்த காட்டில் சிலர் கும்பலாக கூடி இருந்தனர். அவர்கள், அந்த வழியாக ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

ஆனால் போலீசார் விரைந்து செயல்பட்டு அவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் அனைவரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சூலூரை சேர்ந்த சிவசாமி (வயது 55), சீனிவாசன் (50), பல்லடத்தை சேர்ந்த கார்த்திக் (35), கோவை கே.கே.புதூரை சேர்ந்த அருண் (38), ராசிபாளையத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (47), தென்னம்பாளையத்தை சேர்ந்த துரைராஜ் (48) உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்ற இடத்தின் உரிமையாளரான தென்னம்பாளையத்தை சேர்ந்த வடிவேலு என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News