செய்திகள்
மெட்ரோ ரெயில் திட்டம்

மோனோ ரெயில் பாதையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி

Published On 2020-08-09 03:37 GMT   |   Update On 2020-08-09 03:37 GMT
மோனோ ரெயிலுக்காக உத்தேசித்த வழித்தடத்தில், மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
சென்னை:

மெட்ரோ ரெயிலுக்கான 2-வது திட்டம் ரூ.69 ஆயிரம் கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தூரத்தில் 128 ரெயில் நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது. இதில் 52 கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கி வருகிற 2024-2025 ஆண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை புறவழிச்சாலை கிராசிங், ராமச்சந்திரா மருத்துவமனை, ஐயப்பந்தாங்கல் பஸ் டிப்போ, காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பஸ் டெர்மினஸ் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் பூந்தமல்லியில் வரவிருக்கும் டெப்போவை இணைக்கும் வகையில் மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. 9 ரெயில் நிலையங்களுடன் உயர்த்தப்பட்ட பாதையை 3 ஆண்டுகளுக்குள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான ஆவணங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரெயிலின் 4-வது திட்டம் சென்னையின் மைய பகுதியை இணைக்கிறது. போரூர்-பூந்தமல்லி நீட்டிப்பு முன்பு மோனோ ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு கத்திப்பாராவை, பூந்தமல்லியுடன் இணைக்கும் வகையில் மோனோ ரெயில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போரூர் மற்றும் பூந்தமல்லிக்கு இடையில் பயணிகள் போக்குவரத்து குறித்து மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆய்வு செய்தது.

ஆய்வில், அந்த பகுதிகளில் போக்குவரத்து அடர்த்தி இருப்பதுடன், பிறவகை பொது போக்குவரத்தும் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் 4-வது திட்டம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம், கோடம்பாக்கத்தில் உள்ள பவர் ஹவுசில் இருந்து போரூர் சந்திப்பு வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு உள்ளது. இதில் தான் மோனோ ரெயிலுக்காக உத்தேசிக்கப்பட்ட வழித்தடம் வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News