செய்திகள்
ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.

கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2020-08-07 09:23 GMT   |   Update On 2020-08-07 09:23 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. 

இதன்காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் வினாடிக்கு 4,500 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை காவிரி ஆற்றின் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல்லுக்கு உபரி நீர் வரத்தொடங்கியது. நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

நேற்று பகல் 12 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. 

தமிழக-கர்நாடக எல்லையில் பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை அளவீடு செய்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லில் காவிரிக்கரையோர பகுதிகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவிகளிலும், ஆற்றங்கரைகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஒகேனக்கல்லில் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் ஒலிப்பெருக்கிகள் மூலமாக எச்சரிக்கை விடுத்தனர். ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே கர்நாடகத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழக-கர்நாடக மாநில எல்லையான அடிபாலாறு பகுதிக்கு பொங்கும் நுரையுடன் வந்து சேர்ந்தது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 625 அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News