செய்திகள்
அரிசி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 330 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்

Published On 2020-07-26 14:19 GMT   |   Update On 2020-07-26 14:19 GMT
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 330 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கோத்தகிரி:

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுகுளா ஊராட்சி கிராம பகுதிகளான காக்கா சோலை மற்றும் எம். கைகாட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு கடந்த வாரம் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஊட்டி சிறப்பு பிரிவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, ஊராட்சி சார்பில் தினந்தோறும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த 330 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவு தொகுப்பு வழங்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து காக்கா சோலை கிராமப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெடுகுளா ஊராட்சித் தலைவர் சுகுணா சிவா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மனோகரன் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் மற்றும் ஜெயபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் காக்கா சோலை தனிமைப்படுத்த பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்களுக்கு சுமார் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதைப்போல நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட எம் கைகாட்டி பகுதியைச் சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட 30 குடும்பங்களுக்கும் இதேபோல உணவு பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், நெடுகுளா ஊராட்சி செயலர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News