செய்திகள்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கேபிள் டி.வி. கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை- ஆபரேட்டர்களுக்கு, அமைச்சர் எச்சரிக்கை

Published On 2020-07-22 01:54 GMT   |   Update On 2020-07-22 01:54 GMT
தமிழக அரசு நிர்ணயித்த சந்தா தொகைக்கு மேல் கேபிள் டி.வி. கட்டணம் வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆபரேட்டர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் சிறந்த கேபிள் டி.வி. சேவையை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்குகிறது. இதுவரை 16 ஆயிரத்து 712 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 35 லட்சத்து 64 ஆயிரத்து 589 விலையில்லா ‘எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்’களையும், 3,728 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக ரூ.500 என்ற குறைந்த விலையில் 38 ஆயிரத்து 200 ‘எச்.டி. செட்டாப் பாக்ஸ்’களையும் வழங்கியுள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் ரூ.140 மற்றும் 18 சதவீத வரி என்ற மாதக்கட்டணத்தில் 61 கட்டணச் சேனல்களும், 137 கட்டணமில்லா சேனல்களும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சந்தாதாரர்களுக்கு ‘எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்கள்’ விலையில்லாமலும், ‘எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள்’ ரூ.500 என்ற குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. சந்தாதாரர்கள் மாத சந்தா கட்டணமாக ரூ.140 மற்றும் 18 சதவீத வரி மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

கூடுதல் தொகை வசூல் செய்வதாக புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252911 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், இந்நிறுவனத்திடம் இருந்து இலவசமாக பெறும் ‘எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்’களை சந்தாதாரர்களுக்கு தொகை ஏதும் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக வழங்க வேண்டும்.

மேலும், சந்தாதாரர்களிடமிருந்து அரசு நிர்ணயம் செய்த சந்தா தொகைக்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது. அதிக தொகை வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News