செய்திகள்
கைது

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ- ஒருவர் கைது

Published On 2020-07-15 16:34 GMT   |   Update On 2020-07-15 16:34 GMT
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி யூ-டியூப்பில் வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என பாஜக புகார் அளித்துள்ளது.

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோக்கள் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் தவறான வீடியோக்கள் பரவுவதை தடுக்க அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கினர்.  இவ்வழக்கு தொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி யூ-டியூப்பில் வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்ற நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 
Tags:    

Similar News