செய்திகள்
கோப்புபடம்

மரங்கள் மீது ஆணி அடித்து விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை - சென்னை மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-07-15 08:27 GMT   |   Update On 2020-07-15 08:27 GMT
மரங்கள் மீது ஆணி அடித்து சட்டவிரோதமாக விளம்பரம் செய்வோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், சினேகம் அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சென்னையில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்களின் மீது தனியார் நிறுவனங்கள் ஆணி அடித்து விளம்பர பலகைகளை தொங்க விடுகின்றனர். மின்சாரம் வயர்களையும், டியூப் லைட், சீரியல் லைட் போன்றவற்றையும் மரங்கள் மீது போடுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் ராஜா சீனிவாஸ், “மரங்கள் மீது விளம்பரம் செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. சட்டவிரோதமாக செய்யப்படும் இந்த விளம்பரங்களை மாநகராட்சி நிர்வாகம் உரிய கால இடைவெளியில் அப்புறப்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது.’ என்றார். இதுகுறித்து விரிவான பதில் மனுவும் தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

இதை பதிவு செய்துக் கொண்டு நீதிபதிகள், “சென்னையில் எந்த பகுதிகளில் மரங்கள் மீது ஆணி அடித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மின்சார ஒயர் உள்ளிட்ட தனியார் நிறுவன கேபிள் செல்கிறது என்பது குறித்து தனித்தனியாக, அந்த பகுதியை குறிப்பிட்ட மனுதாரரின் அமைப்பு புகார் செய்யவேண்டும். அந்த புகாரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் சட்டப்படி பரிசீலித்து, சட்டவிரோதமாக விளம்பரம் செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பின்னர் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை வருகிற அக்டோபர் 14-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News