செய்திகள்
கோவை உக்கடம் பகுதியில் ஒரு வீட்டில் மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

கொரோனா பரவல் அதிகரிப்பு - கோவையில் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி தீவிரம்

Published On 2020-07-02 15:13 GMT   |   Update On 2020-07-02 15:13 GMT
கோவையில் கொரோனா பரவலை தடுக்க வீடு,வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேலான முதியவர்களின் விவரங்களும் கேட்கப்படுகிறது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-க்கும் மேல் உள்ளது. கோவை மநகரில் மட்டும் 200 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பீளமேடு, சின்னியம்பாளையம், ஒண்டிப்புதூர், சரவணம்பட்டி, ரத்தினபுரி, ராமநாதபுரம், குனியமுத்தூர், போத்தனூர், டவுன்ஹால் உள்ளிட்ட பல பகுதிகளில் நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் பரவல் அதிகரித்து இருப்பதால் இ-பாஸ்சுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது.

கோவை மாநகரில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்தையும் கணக்கெடுக்க மாநகராட்சி முடிவு செய்து கணக்கெடுப்பு பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி கூறியதாவது:-

வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம், மொத்தம் 1,500 பேர் நியமிக்கப்பட்டு கணக்கெடுத்து வருகிறார்கள். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா? வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் யார்? ஒவ்வொரு வீட்டிலும் 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள், மூதாட்டிகளின் நிலை, அவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா? என்பது போன்ற விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.

முதியவர்கள், மூதாட்டிகள் உள்பட அனைவருக்கும் நோய் பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News