செய்திகள்
நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

ரெயில்வே கேட் மூடல் : நீடாமங்கலத்தில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2020-06-28 09:26 GMT   |   Update On 2020-06-28 09:26 GMT
ரெயில்வே கேட் மூடப்பட்டதால் நீடாமங்கலத்தில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் இணைப்பு பணிக்காக நேற்று காலை 6 மணிக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து சரக்கு ரெயில் பெட்டிகள் இணைப்பு பணி தொடங்கியது. அப்போது தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர் நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்றது.

ரெயில் பெட்டி இணைப்பு பணி மற்றும் சரக்கு ரெயில் கடந்து சென்றதால் 1½ மணிநேரம் ரெயில்வேகேட் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர். ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்த 1½ மணி நேரமும் நெடுஞ்சாலையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. ரெயில்வே கேட் திறந்த பின்பே வாகனங்கள் சென்றன.

நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவழிச்சாலை திட்டம், மேம்பாலம் திட்டம் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற முன்வந்து நிதியும் ஒதுக்கியது. ஏதோ காரணத்தால் இருவழிச்சாலை திட்டம் பாதியில் நின்று போனது. மேம்பாலம் திட்டம் தொடங்கப்படவே இல்லை. தொலை நோக்குத்திட்டமான இருவழிச்சாலை திட்டம், மேம்பாலம் திட்டங்கள் கிடப்பில் போட்டு இருப்பது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. 
Tags:    

Similar News