செய்திகள்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

நெருக்கடியில் உள்ள நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு- ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை

Published On 2020-06-26 06:02 GMT   |   Update On 2020-06-26 06:02 GMT
கொரோனாவால் கடும் நெருக்கடியில் உள்ள நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னை:

சென்னை சர்வதேச மையம் நடத்திய ஆன்லைன் கருத்தரங்கில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று மத்திய அரசின் பல்வேறு நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். அவர் பேசியதாவது:-

கொரோனா தொற்றுநோயால் கடும் நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு முறை கடன் மறுசீரமைப்பு குறித்து மத்திய ரிசர்வ் வங்கியுடன் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. 

வட்டி வீதக் குறைப்பு ஏன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளுடன் ஆலோசிக்கப்படுகிறது. வட்டி வீதக் குறைப்புகளின் பயனை வங்கிகள் முழுமையாக வழங்காததற்கு கூறும் காரணங்கள் நம்பத்தகுந்தவை அல்ல.

வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அவசரகால கடன் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும். அதேசமயம், நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பில்களின் அடிப்படையில், உத்தரவாதமில்லா கடன் வழங்குவதற்கான யோசனை குறித்தும் முடிவு செய்யப்படும்.

தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 3 லட்சம் ரூபாய் அவசரகால கடன் வழங்கப்படுகிறது.

தொழில்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும், சுயசார்பு இந்தியா திட்டத்தை எவ்வாறு முழுமையாக செயல்படுத்துவது என்பதையும் தொழில் துறையினர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்தியா ஒரு பெரிய சந்தை. மருந்துப் பொருட்களுக்காக ஒன்றிரண்டு நாடுகளை சார்ந்திருக்காமல், நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News