செய்திகள்
பாசன வாய்க்காலுக்கு நீரொழுங்கியிலிருந்து தண்ணீரை திறந்து வைத்த அமைச்சர் காமராஜ்

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் 4 நாட்களில் கடைமடையை வந்தடைந்தது- அமைச்சர் காமராஜ்

Published On 2020-06-23 10:12 GMT   |   Update On 2020-06-23 10:12 GMT
இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் ஆறுகள் தூர்வாரப்பட்டதால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 4 நாட்களில் கடைமடையை வந்தடைந்துள்ளது என்று அமைச்சர் காமராஜ் பெருமிதத்துடன் கூறினார்.
முத்துப்பேட்டை:

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான முத்துப்பேட்டை ஒன்றியம் ஜாம்புவானோடை கோரையாற்று நீரொழுங்கிக்கு வந்து சேர்ந்தது. இதனை வரவேற்கும் வகையில் அமைச்சர் காமராஜ் மலர் தூவினார். மேலும் அதே பகுதியில் பிரிந்து செல்லும் ஜாம்புவானோடை காலனி பாசன வாய்க்காலுக்கு நீரொழுங்கியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த 16-ந் தேதி கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 20-ந் தேதி இரவு திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு வந்தது. இதற்கு முன்பு கடைமடைக்கு தண்ணீர் வருவதற்கு 10 நாட்களுக்கு மேலாகும்.

இந்த முறை நான்கு நாட்களிலேயே திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்தடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். இந்த நிகழ்வானது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் ஆறுகள் தூர்வாரப்பட்டதே இதற்கு காரணம்.

திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது. டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தேவைக்கான விதை, பூச்சிகொல்லி மருந்து, உரம் ஆகியவை தேவையான அளவு கையிருப்பு உள்ளது. விவசாயிகளுக்கு விவசாய கடனும் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டர் ஆனந்த், திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகுவேந்தன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News