செய்திகள்
கிருஷ்ணா தண்ணீர்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 320 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2020-06-04 12:44 GMT   |   Update On 2020-06-04 12:44 GMT
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 320 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
ஊத்துக்கோட்டை:

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீர் 28-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கும், 29-ந் தேதி பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது.

கண்டலேறு அணையிலிருந்து முதலில் 500 கனஅடிதிறக்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 1250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த நீர் இத்தனை நாட்களாக சராசரியாக வினாடிக்கு 250 கனஅடி வீதம் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. இன்று காலை நீர் வரத்து வினாடிக்கு 320 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 21.17 அடியாக பதிவானது. 365 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 300 கனஅடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News